செவ்வாய், 17 மார்ச், 2009

மத்தியிலும், மாநிலத்திலும் இனி யாரும் ஆட்சி அமைக்க முடியாது:-

மேலப்பாளையம், மார்ச்.17- `
சிறுபான்மை இன மக்களின் ஆதரவு இல்லாமல் மத்தியிலும், மாநிலத்திலும் இனி யாரும் ஆட்சி அமைக்க முடியாது`` என்று, தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் எஸ்.ஹைதர் அலி கூறினார்.
பொதுக்கூட்டம்
மேலப்பாளையம் பஜார் திடலில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தேர்தல் நிலை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக வளைகுடா பகுதிகளுக்கான முன்னாள் செயலாளர் கே.ஏ.பசூலுல்லாஹி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான எஸ்.ஹைதர் அலி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- மக்கள் அங்கீகாரம்:-
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் 1995-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சமுதாய மக்களுக்காக இந்த அமைப்பு பாடுபட்டு வருகிறது. ஆனால் அரசியல் ரீதியாக செயல்பட ஒரு அமைப்பு தேவை என்பதால் இந்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி மனித நேய மக்கள் கட்சி உருவானது. இதில் முஸ்லிம்களுடன், முஸ்லிம் அல்லாத மக்களும் இணைந்துள்ளனர். நாட்டில் 20 சதவீதமாக உள்ள சிறுபான்மை இன முஸ்லிம்களுக்கு அரசியல், ஆட்சி அதிகாரம் போன்றவற்றுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க இந்த அமைப்பு தொடர்ந்து பாடுபடும். இது தவிர தாழ்த்தப்பட்ட பழங்குடி இன மக்களின் உரிமைகளை பாதுகாக்க இந்த அமைப்பு போராடும். அரசியலில் தூய்மை, நேர்மை ஆகியவற்றை கடைபிடிக்கும் இயக்கமாக இந்த கட்சி கடைசி வரை பாடுபடும்.
மத்தியிலும், மாநிலத்திலும்
கடந்த தேர்தலின் போது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மத்தியில் காங்கிரசையும், மாநிலத்தில் தி.மு.க.வையும் ஆதரித்தது. ஆனால் இந்த 2 இயக்கங்களும் முஸ்லிம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறி விட்டன. குறிப்பாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு இருந்த 7 சதவீத இடஒதுக்கீடு தரவில்லை. காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தி.மு.க.வும் இதுபற்றி எடுத்துக்கூறவில்லை.
வாணியம்பாடி, பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிகள் த.மு.மு.க.வுக்கு தருவதாக உறுதி அளித்த தி.மு.க. அதை செயல்படுத்தவில்லை. எனவே தான் சிறுபான்மை இஸ்லாமிய மக்களின் ஒட்டுமொத்த உணர்வை பிரதிபலிக்க மனித நேய மக்கள் கட்சி களம் இறங்கியுள்ளது. சிறுபான்னை மக்களின் ஆதரவு இல்லாமல் மத்தியிலும், மாநிலத்திலும் இனிமேல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. 15-வது பாராளுமன்றத்தில் மனித நேய மக்கள் கட்சி பிரதிநிதிகள் தமிழகத்தில் இருந்து நிச்சயம் இடம் பெறுவார்கள்.
இவ்வாறு தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் எஸ்.ஹைதர் அலி பேசினார். கலந்து கொண்டவர்கள்:-
கூட்டத்தில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில துணை பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிபாயி, மனித நேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் காஞ்சி பி.அப்துல்சமது, மாவட்ட த.மு.மு.க. செயலாளர் உஸ்மான்கான், துணை செயலாளர் கே.எஸ்.ரசூல் மைதீன், மேலப்பாளையம் த.மு.மு.க. நகர தலைவர் கே.கே.மைதீன், செயலாளர் காசிம் பிர்தவுசி, பொருளாளர் ஏ.காஜா குவைத் மங்காஃப் கிளைச் செயலாளர் செய்யது ஹஜ்ஜப்பா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை: